திருத்தணி அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் திடீர் தீ விபத்து கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகள் தப்பினர்
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள், புறநோயாளிகள், ஆய்வகம், எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு பிரிவு உட்பட, 10க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. மகப்பேறு பிரிவில் , ஏழு கர்ப்பிணியர், ஆறு பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உட்பட, 19 பேர் மகப்பேறு வார்டில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.நேற்று மாலை 3:00 மணிக்கு, மகப்பேறு வார்டில் கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்கும் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. இதனால், அறை முழுதும் புகை சூழ்ந்ததால், அங்கிருந்த மருத்துவர், செவிலியர் உடனே வெளியேறினர்.மேலும், மருத்துவமனை தலைமை மருந்தாளர் நேதாஜி மற்றும் மருத்துவ ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மகப்பேறு வார்டில் இருந்த 19 பேரையும் மீட்டனர்.பின், மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மகப்பேறு வார்டுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தும், தீ அணைக்கும் கருவியால் குளிர்சாதன பெட்டி மீது எழுந்த புகை மற்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின், வார்டு முழுதும் சுத்தம் செய்து, மீண்டும் கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தை என, 19 பேரையும் மகப்பேறு வார்டிற்கு அழைத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மாலை 4:30 மணிக்கு திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லட்சுமிநரசிம்மன் மகப்பேறு வார்டிற்கு சென்று, தீ விபத்து ஏற்பட்ட அறையை பார்வையிட்டார்.
சதுர்யமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்கள்
மகப்பேறு வார்டு, கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்கும் அறையில் குளிர்சாதன பெட்டியில் தீப்பிடித்ததும், அங்கிருந்த இரண்டு ஊழியர்கள், உடனடியாக வார்டில் இருந்த தீயணைக்கும் கருவி மூலம் தீ பரவாமல் அணைத்தனர். இதற்கு காரணம், மாதம் ஒரு முறை தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு வந்து தீயணைக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்ததால், ஊழியர்கள் சதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.