ஒரே இடத்தில் இருபத்திரப்பதிவு அலுவலகம் இட நெருக்கடியால் பொதுமக்கள் தவிப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் 14 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, திருவள்ளூர், பாண்டூர், காக்களூர், வேப்பம்பட்டு, பாக்கம், வெள்ளியூர், செவ்வாப்பேட்டை உள்பட 76 கிராமங்களைச் சேர்ந்தோர், நிலம் விற்பனை உள்ளிட்ட பத்திரப்பதிவு நடத்தி வருகின்றனர். தினமும், சராசரியாக 250 பத்திரப்பதிவு இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. முகூர்த்த நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.கடந்த ஆண்டு, 104.39 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு வாயிலாக வருவாய் ஈட்டி மாவட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டும் இடமாக திகழ்ந்தாலும், குறுகிய இடத்தில் இயங்கி வருவதால் பத்திரப்பதிவிற்கு வருவோருக்கு எவ்வித அடிப்படை வசதியும் கிடைப்பதில்லை. நிற்க கூட இடமில்லாமல், குறுகிய கட்டடத்தில் அந்த அலுவலகம் இயங்கி வருகிறது. வருவோர் அமர இருக்கை, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை, குடிநீர் போன்ற எவ்வித வசதியும் அந்த அலுவலகத்தில் இல்லை.மேலும், தாலுகா அலுவலக வளாகத்தில், தாசில்தார், கிளை சிறை, வட்ட வழங்கல் அலுவலகம், அரசு ஊழியர் சங்க அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனால், இருசக்கர வாகனங்கள் கூட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதை ஏற்ற பத்திரப்பதிவு துறை, திருவள்ளூர், ஈக்காடு, பாண்டூர் உள்ளிட்ட 40 கிராமங்களை ஒரு பிரிவாகவும், பெருமாள்பட்டு, பாக்கம், வெள்ளியூர் உள்பட 36 கிராமங்களைக் கொண்ட மற்றொரு பிரிவாகவும் பிரித்து தனித்தனி பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்படும் என, உத்தரவிட்டது.இதையடுத்து, பெருமாள்பட்டு வருவாய் பகுதியில், இடம் தேர்வு செய்யும் கடந்த சில மாதத்திற்கு முன் துவங்கியது. மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது, திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தையே இரண்டாக பிரித்து, இரண்டு அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இதனால், பத்திரப்பதிவு அலுவலகம் பிரித்ததற்கான நோக்கமே நிறைவடையாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் பத்திரப்பதிவு துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. புதிய அலுவலகம் திறக்க அவகாசம் இல்லாததால், தற்காலிகமாக பழைய அலுவலகத்திலேயே இரண்டாவது பிரிவும் திறக்கப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகள் அனுமதியுடன், விரைவில் மாற்று இடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.