உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுப்பு திருவாலங்காடு பதிவு துறை அலட்சியம்

விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுப்பு திருவாலங்காடு பதிவு துறை அலட்சியம்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுப்பதால், விவசாயிகள் சொந்த நிலங்களை விற்க முடியாமல் திண்டாடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டில், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, மணவாள நகர், ஆரணி, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி மற்றும் பூந்தமல்லி என 14 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, நிலம் விற்பனை, வாங்குவது தொடர்பான பத்திரம் பதிவு செய்தல், திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, தினமும், சராசரியாக, 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அவைகள் அனைத்தும், மேற்கண்ட 14 சார் --பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதியப்பட்டு வருகின்றன.பத்திரப்பதிவில் ஏதாவது குறை இருப்பின், புகார் அளித்து தீர்வு காணப்படுகின்றன.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருவாலங்காடு சார் -பதிவாளர் அலுவலகத்தில் குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை பதிவு செய்வதில்லை என கூறப்படுகிறது. நிலங்களை பதிவு செய்ய வருபவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புலம்புகின்றனர். தினமும் இதுபோன்ற நிலங்களை பதிவு செய்ய விவசாயிகள் சார்- பதிவாளர்கள் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது :திருவாலங்காடு சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் எனக்கு 60 சென்ட் நிலம் உள்ளது. என் மகளின் திருமண செலவிற்காக 10 சென்ட் நிலத்தை பிரித்து விற்பனை செய்ய வேண்டி கடந்த நான்கு மாதங்களாக திருவாலங்காடு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன்.நிலத்தை பிரித்து விற்க முடியாது. மனையாக மாற்றி பதிவு செய்து விற்பனை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது. ஆனால், குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை, விவசாய நிலமாக விற்க, வாங்க தடை இல்லை. சாலையை ஒட்டியுள்ளது என்று கூறி, குறைந்த பரப்பளவில் கைமாறும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. இதில் சார்-- பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், பதிவுதுறை டி.ஐ.ஜி., உறுதி செய்ய வேண்டும் என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.அவருடைய உத்தரவை சார்- பதிவாளர்கள் பின்பற்றுவது இல்லையோ என்ற ஐயம் எழுந்துள்ளது. விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற குளறுபடிகளை களைய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ