போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர செடிகள் அகற்றம்
திருவாலங்காடு: திருவாலங்காடு-- பேரம்பாக்கம் வழித்தடத்தில், பழையனுார், ராஜபத்மாபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில், பேரம்பாக்கம், திருவாலங்காடு, திருவள்ளூர் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தவிர, 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், தனியார் தொழிற்சாலை வாகனங்கள் உட்பட, 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சாலையோரத்தில் செடிகள் ஆக்கிரமித்து, புதர் போல் காட்சி அளித்தது. இதனால், விவசாயிகள் உட்பட, நடந்து செல்வோர் பாதிக்கப்பட்டனர்.மேலும், வளைவுகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, சாலையோர புதர் செடிகளை திருவாலங்காடு நெடுஞ்சாலை பணியாளர்கள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.