மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னை அவென்யூ, பெருமாள் நகர் ஆகிய பகுதிகளில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குறைந்த அளவிலான வீடுகள் இருந்ததால், இவற்றிற்கு பொன்னேரி - தச்சூர் சாலையில், அரசு பேருந்து பணிமனை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மின் பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு தனி மின்மாற்றி பொருத்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மின்மாற்றி பொருத்துவதற்கு திட்டமிட்டு, அதற்காக அங்குள்ள பூங்கா அருகே கம்பம் பதித்து, அதில் இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டன.அதேசமயம், அதில் மின்மாற்றி மட்டும் பொருத்தப்படாமல் உள்ளது. தளவாடங்கள் பொருத்தி ஒரு மாதமான நிலையில், மின்மாற்றி பொருத்துவதில் மின்வாரியத்தினர் தாமதம் செய்வது எதற்காக என, குடியிருப்புவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.இதன் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மின் பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்கிறது. எனவே, பொன்னேரி மின்வாரியத்தினர் உடனடியாக மின்மாற்றியை பொருத்தி, சீரான மின் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.