| ADDED : ஜூன் 13, 2024 01:04 AM
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில், ஜீவா தெரு, சிவராஜ் தெரு, காந்தி தெரு, அண்ணா தெரு ஆகியவற்றில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.இந்த தெருச்சாலைகள், 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், இவற்றில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, அவை சரிவர மூடப்படாததால், தெருச்சாலைகள் மேலும் மோசமாகி போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி சகதியாக மாறி உள்ளன. இதனால், குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் சகதியில் தடுமாற்றத்துடன் பயணித்து கீழே விழுகின்றனர்.தெருச்சாலை ஓரங்களில் உள்ள திறந்தநிலை கழிவுநீர் கால்வாய்களும் சரிவர பராமரிக்கப்படாததால், அவை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, தேங்கியுள்ள மழைநீருடன் கலந்து சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை இல்லாததால் குடியிருப்புவாசிகள் விரக்தியில் உள்ளனர். எனவே, தெருச்சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.