தரமற்ற முறையில் கட்டுமானம் இலங்கை தமிழர்கள் புகார்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 920 குடும்பங்களைச் சேர்ந்த 2,680 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.அவர்களின் அடிப்படை தேவை கருதி, 11.48 கோடி ரூபாய் செலவில், 198 தொகுப்பு வீடுகள் நிறுவப்பட்டு வருகின்றன. அதன் கட்டுமான பணிகளை, ஐந்து ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.அவற்றில் சில வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் எம் - -சாண்டிற்கு பதிலாக, பள்ளத்தை நிரப்ப பயன்படுத்தப்படும் ‛டஸ்ட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், எந்த நேரத்திலும் வீடுகள் இடிந்து விழும் நிலை ஏற்படும். கட்டுமானம் குறித்து கேள்வி எழுப்பினால் மிரட்டல் விடுக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அரசு துறை சார்ந்த பொறியாளர்கள், பணிகளை ஆய்வு செய்து, தரமான கட்டுமானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.