மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த கிரண், 13, என்பவர், அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை, பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி, கிரணை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால் மாணவனின் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டது.தகவல் அறிந்து சென்ற பெற்றோர் மற்றும் கிராமத்தினர் சிலர் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தகவல் அறிந்து சென்ற பொன்னேரி போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கிராம மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மாணவனை ஆம்புலன்ஸ் வாயிலாக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:மாணவன் கிரண் பள்ளியின் தலைமை மாணவனாக இருக்கிறார். வழக்கம் போல் காலை நேரத்தில் பள்ளி துவங்கும் முன் நுழைவாயில் கதவை அடைக்க சென்றார். அப்போது, தாமதமாக வந்த இரு மாணவியரை பார்த்து, எதற்கு லேட்டாக வருகிறீர்கள், சீக்கிரமா வாங்க என தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் உஷாராணி, தனக்கு வணக்கம் கூறாமல், தன்னைதான் லேட் என கூறுவதாக நினைத்து மாணவன் கிரணை, அவர் அறைக்கு அழைத்து சென்று அடித்துள்ளார்.இதுகுறித்து தலைமையாசிரிடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டார்.இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.