கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த ரயில் பயணியர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனைய மாக உள்ளது. கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே தினமும், 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் மதிப்பில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் ரயில் பயணியரை அச்சமடைய செய்துள்ளது.கல்லுாரி மாணவர்கள் அடிதடி, ரகளை, கோஷ்டி மோதல், இரவில் ரயில் பயணியரிடம் நடக்கும் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அவற்றில் பல சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை என, பயணியர் தெரிவிக்கின்றனர்.அதற்கு முக்கிய காரணம், வெகு தொலைவில்கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையம் இருப்பதே காரணம் என கூறுகின்றனர்.உதாரணமாக, ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் விபத்து அல்லது வழிப்பறி சம்பவம் நடந்தால், அங்கிருந்து, 58 கி.மீ., தொலைவில் உள்ள கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு புகார்தாரர் செல்ல வேண்டும்.கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஆள்பற்றாக்குறை இருப்பதால், பொன்னேரியில் உள்ள புறக்காவல் நிலையத்தையும்முறையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.அனைத்து வசதிகளும் நவீனமயமாக்கப்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டும்.அவ்வாறு அமைத்தால், மீஞ்சூரில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள, 36 கி.மீ., தொலைவை எளிதாக கண்காணித்து ரயில் பயணியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.