பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு மஞ்சப்பை திட்டம் என்னாச்சு?
திருவள்ளூர் :பிளாஸ்டிக் பயன்படுத்தினால், கேன்சர் உள்ளி,ட்ட நோய்கள் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. மண்ணின் தன்மையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 2021ல் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற மக்கள் பிரசாரத்தை துவக்கி வைத்தார்.இதையடுத்து, மாநிலம் முழுதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கலெக்டர் அலுவலகம், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் திருத்தணி முருகன் கோவில் என, நான்கு இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், 10 ரூபாய் செலுத்தி, மஞ்சப்பை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டும், தற்போது பயன்பாடில்லாமல் வீணாகி போனது. பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில், சம்பந்தப்பட்ட அதிகாரிள் அலட்சியம் காட்டியதால், தற்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வும் பெயரளவிற்கு நடப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மீண்டும் தொடர, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து, மஞ்சப்பை திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருவள்ளூர் மாசு கட்டுப்பாடு அதிகாரி கூறியதாவது:தமிழக அரசு எங்களுக்கு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வுக்கு மட்டும் தான் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சிக்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் தான் எடுக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பகுதிவாசிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100- - 1,000 ஆண்டுகள்பஞ்சுக் கழிவுகள் 1-5 மாதங்கள்காகிதம் 2-5 மாதங்கள்உல்லன் சாக்ஸ் 1-5ஆண்டுகள்டெட்ரா பேக்குகள் 5ஆண்டுகள்தோல் காலணி 2,5-40 ஆண்டுகள்டயபர் நாப்கின் 500 - -800 ஆண்டுகள்