உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 ஆண்டில் 100 பேர் உயிரிழப்பு: நீர்நிலைகளில் செல்பிக்கு தடை

10 ஆண்டில் 100 பேர் உயிரிழப்பு: நீர்நிலைகளில் செல்பிக்கு தடை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளில் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும், நீர்நிலைகள் அருகில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக, பலத்த மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்தேக்கம், சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்தேக்கத்தின் தேக்க திறன் கொள்ளளவு பாதுகாப்பு கருதி, பூண்டி மற்றும் புழல் நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கடந்த, 15ம் தேதி முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதன் காரணமாக, தாமரைப்பாக்கம், அம்மணம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில், திருவள்ளுர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை காரணமாக, பூண்டி, புழல் உள்ளிட்ட நீர் தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆரணி, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன. தற்போது, பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 5,000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சோழவரம் ஏரி சென்று, பின் மணலி, எண்ணுார் வழியாக கொசஸ்தலையாறு இரு பக்கமும் வழித்தடத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகமும், அனைத்து துறைகளையும் முடுக்கி விடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பூண்டி நீர்தேக்கம் உள்ளிட்ட, அனைத்து நீர்தேக்கம் மற்றும் ஆற்றங்கரையோரம், மக்கள் கூட்டம், கூட்டமாக சிறு குழந்தைகளை அழைத்து வந்து, செல்பி எடுப்பது, நீர்நிலைகளை எட்டி பார்ப்பது, போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற தேவையற்ற செயல்களில், தேவையில்லாத விபரீதத்தில் ஈடுபட வேண்டாம். பருவமழையின் போது, கடந்த 10 ஆண்டுகளில் மழையால், 100 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் முடிந்தளவு வீடுகளில் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீர்நிலைகளில் குளிக்க தடை

திருத்தணி பகுதியில் தொடர் மழையால், நந்தியாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைக்கட்டில் இருந்து, ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வருவாய் கோட்டத்தில், 35க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று தாலுகாவில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் இளைஞர்கள் குளிப்பதற்கும், மக்கள் கடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழையளவு விபரம்:

இடம்-மழை(செ.மீட்டரில்)* திருத்தணி-7.8* திருவாலங்காடு-6.7* கும்மிடிப்பூண்டி-5.7* பூண்டி-5.5* ஆர்.கே.பேட்டை-4.1* திருவள்ளூர்-3.6* ஜமீன் கொரட்டூர்-3.5* தாமரைப்பாக்கம்-3.2* ஆவடி-3.1* ஊத்துக்கோட்டை-2.9* சோழவரம்-2.8* பள்ளிப்பட்டு-2.5* செங்குன்றம்-2.4* பொன்னேரி-1.8* பூந்தமல்லி-1.8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ