பூண்டியில் 1,000 கன அடிநீர் திறப்பு
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கமாகும். தற்போது மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 3.121 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்தம் நீர்மட்டம், 35 அடி. தற்போது 34.92 அடி. மழைநீர் வினாடிக்கு, 1,290 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.இதனால் பூண்டி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால், வெள்ளநீர் வழிகாட்டுதல்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு ஒரு மதகு வழியே, வினாடிக்கு, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால், கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.