போக்குவரத்துக்கு இடையூறு 12 கால்நடைகள் பறிமுதல்
திருவள்ளூர்:திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 12 கால்நடைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் நகரில், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, தேரடி, செங்குன்றம் சாலை ஆகியவை போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது. இச்சாலைகளில் தினமும் கால்நடைகள் சுற்றித்திரிவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து, சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால், அவற்றை பறிமுதல் செய்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, கலெக்டர் பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்த எச்சரிக்கையை கால்நடை உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை.இதையடுத்து, சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து, கோசாலையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் நேற்று, திருவள்ளூர் நகரில் போக்கவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில், 12 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், அந்த கால்நடைகள் நுங்கம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.திருவள்ளூர் நகரில் தொடர்ந்து கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.