வேன் கவிழ்ந்து விபத்து 12 தொழிலாளர்கள் காயம்
திருத்தணி, தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையோரம் கவிழ்ந்ததில், எட்டு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு, திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வேன் மூலம் பணிக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை, அடிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர், தொழிற்சாலை வேனில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை திருநாவுக்கரசு, 40, என்பவர் ஓட்டினார். அடிக்கல்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்கு, ஓட்டுனர் சாலையோரம் நிறுத்திய போது, திடீரென வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த எட்டு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அனைவரையும் மீட்டு, கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.