உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சி.கே.டி., கூனங்குப்பம் பொறிப்பகத்தில் 14,704 கடல் ஆமை முட்டைகள் குஞ்சு பொறித்தவை கடலுக்கு அனுப்பி வைப்பு

சி.கே.டி., கூனங்குப்பம் பொறிப்பகத்தில் 14,704 கடல் ஆமை முட்டைகள் குஞ்சு பொறித்தவை கடலுக்கு அனுப்பி வைப்பு

பழவேற்காடு:வங்காள விரிகுடா கடல் பகுதியை ஒட்டி பழவேற்காடு மீனவ பகுதி உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதிகளில், டிசம்பர் - ஏப்ரல் மாதங்களில், 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகள், முட்டையிட்டு செல்வது வழக்கம்.இந்த வகை ஆமைகள், இந்திய வன உயிரின சட்டம் - 1972ன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரைகளில் இரவு நேரங்களில் மட்டும் வந்து முட்டையிடும் ஆமைகளின் நடவடிக்கைகள் வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.முட்டைகளை பாதுகாக்கப்பதற்காக, வனத்துறையினர் அவற்றை சேகரித்து, குஞ்சு பொறித்த பின், கடலில் விடுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல், வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில், பழவேற்காடு வனத்துறையினர், முகத்துவாரம் - காட்டுப்பள்ளி வரை, தினமும் இரவு நேரங்களில் கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகளின் முட்டைகளை சேகரித்தனர்.பழவேற்காடு கூனங்குப்பம் கடற்கரை பகுதியில் மூங்கில் கட்டைகள், சணல் பாய்களை கொண்டு பிரத்யேக பொறிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. சேகரித்த முட்டைகளை, பொறிப்பகத்தின் உள்ளே, இரண்டு அடி ஆழம் பள்ளம் தோண்டி மூடி வைத்துள்ளனர்.ஆமை மூட்டைகள் எடுக்கப்பட்ட தேதி, எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை சிறு குச்சிகளில் எழுதி பதித்து வைக்கப்பட்டு உள்ளன. ஆமை முட்டைகள், 45 - 50 நாட்களில் குஞ்சு பொறித்து, ஒவ்வொன்றாக வெளி வருகின்றன. அவற்றை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர்.இதுவரை, 14,704 முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. பொறிப்பகத்தில் படிப்படியாக இதுவரை, 5,625 முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சு ஆமைகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டு உள்ளன.கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும், மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடைந்து, உயிருடன் கரை ஒதுங்கும் கடல் ஆமைகளை மீட்டு பாதுகாப்பதற்காக, அதே பகுதியில், கடல் ஆமை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.கடல் ஆமைகளின் முட்டைகளை சேகரிக்கும் பணிகள் நிறைவுற்றதாகவும், பொறிப்பகத்தில் உள்ளவை குஞ்சு பொறித்த பின், படிப்படியாக கடலில் விடப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ