தேனீ கொட்டி 17 பெண்கள் காயம்
திருத்தணி:திருத்தணி அருகே நுாறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, தேனீக்கள் கொட்டியதால் 17 பெண்கள் காயமடைந்தனர். திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நுாறு நாள் வேலையில் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அருகில் மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென பறந்து வந்து, பெண்களை கொட்டியது. இதையடுத்து பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.