திருத்தணி, திருவள்ளூர் பகுதியில் சுற்றித்திரிந்த 18 மாடுகள் பறிமுதல்
திருத்தணி:திருத்தணி, திருவள்ளூர் நகராட்சியில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை நேற்று நகராட்சி ஊழியர்கள் பிடித்து, அபராதம் விதித்தனர்.திருத்தணி நகராட்சியில், அதிகளவில் கால்நடைகள் சுற்றி வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.குறிப்பாக அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், சன்னிதி தெரு, சித்துார் சாலை மற்றும் ம.பொ.சி.சாலையில் பகல் நேரத்திலேயே மாடுகள் சுற்றி வருகிறது.இதையடுத்து நகராட்சி கமிஷனர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும், கால்நடைகளை சாலையில் திரிய விட்டனர்.நகராட்சி கமிஷனர் பாலசுப்பிமணியம் உத்தரவுபடி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் நகராட்சியில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகளை பறிமுதல் செய்தனர்.மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சி பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கலெக்டர் உத்தரவின்படி, நகராட்சி கமிஷனர் தாமோதரன் தலைமையிலான, அலுவலர்கள் நேற்று, திருவள்ளூர் நகரில் சுற்றித்திரிந்த கால்நடைகளை, பிடித்தனர்.மொத்தம் உள்ள, 27 வார்டுகளில், நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த, 15 கால்நடைகளை, நகராட்சி ஊழியர்கள் பிடித்து, நுங்கம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில், அடைத்து வைத்துள்ளனர்.அவற்றில், மூன்று கால்நடைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம், தலா 3,000 ரூபாய் அபராதம் வசூலித்த பின், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, சாலையில் கால்நடைகள் திரியவிட்டால், பறிமுதல் செய்யப்படும், கால்நடைகள் ஏலம் விடப்படும் என, நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.