209 பொத்தல் சாலைகளுக்கு 12 ஆண்டுகளுக்கு பின்... விமோசனம் மூன்று மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவு
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், படுமோசமான நிலையில் உள்ள 209 கிராமப்புறம் மற்றும் ஒன்றிய சாலைகள், 12 ஆண்டுகளுக்கு பின், 5.01 கோடி ரூபாய் மதிப்பில், 'டெண்டர்' விடப்பட உள்ளது. 'மோந்தா' புயல் ஓய்ந்த பின், சீரமைக்கும் பணிகளை துவக்கி, மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இங்கு கிராமப்புற சாலைகள், ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 3,500க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பெரும்பாலான சாலைகள் சீரமைத்து, 12 ஆண்டுகளுக்கு மேலானதால் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதுதவிர, சில சாலைகள் முறையாக பராமரிக்காததால், பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதை தொடர்ந்து, அனைத்து ஊராட்சிகளிலும் மிகவும் சேதமடைந்த கிராமப்புறம் மற்றும் ஒன்றிய சாலைகள் குறித்து கணக்கெடுத்து, சீரமைக்க தேவைப்படும் நிதியுதவி குறித்து பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என, ஒன்றிய அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள், சேதமடைந்த சாலைகள் குறித்து கணக்கெடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இதில், 14 ஒன்றியங்களில், 209 சாலைகள், 243.72 கி.மீ.,க்கு மிகவும் சேதமடைந்துள்ளன என, கண்டறியப்பட்டன. முதற்கட்டமாக, இச்சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் 5.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது. மேலும், இப்பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, கலெக்டர் பிரதாப், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால், 12 ஆண்டுகளாக சேதமடைந்த கிராமப்புறம் மற்றும் ஒன்றிய சாலைகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், முதற்கட்டமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள, 209 சாலைகளை சீரமைக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் சாலை பணிக்கு, 'இ - டெண்டர்' விடப்படும். அதற்கு குறைவாக உள்ள தொகைக்கு, ஒன்றிய நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்படும். இப்பணிகள், வரும் ஜனவரிக்குள் முடிக்க அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒன்றியம் சாலைகள் எண்ணிக்கை கி.மீ., (ரூ.லட்சத்தில்) வில்லிவாக்கம் 12 12.45 27.33 புழல் 1 0.24 0.66 பூந்தமல்லி 11 14.94 30.90 சோழவரம் 10 14.49 28.52 கும்மிடிப்பூண்டி 13 14.49 17.09 மீஞ்சூர் 96 92.09 163.96 எல்லாபுரம் 13 15.44 30.84 கடம்பத்துார் 12 15.44 30.84 பூண்டி 3 7.80 37.46 திருவள்ளூர் 11 9.76 24.43 திருத்தணி 9 14.39 31.45 திருவாலங்காடு 6 11.80 29.50 பள்ளிப்பட்டு 6 8.54 22.39 ஆர்.கே.பேட்டை 6 6.86 16.71 மொத்தம் 209 239.27 501.38