பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை
திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி அருகே அரசுக்கு சொந்தமாக இரு 'டாஸ்மாக்' கடை மதுக்கூடத்துடன் இயங்கி வருகிறது.டாஸ்மாக் கடையில், மதியம் 12:00 - இரவு 10:00 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், அதன் அருகில் உள்ள மதுக்கூடத்தில், 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.இரவு 10:00 மணிக்கு அரசு டாஸ்மாக் கடை மூடியவுடன், எப்போது சென்று கேட்டாலும் உடனடியாக மதுபானம் கிடைக்கும். அதற்கு, கூடுதலாக பணம் கொடுத்து, 'குடி'கன்கள் மதுபானம் வாங்கி போதை செல்கின்றனர்.இதனால், இந்த நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.மதுக்கூடம் அருகே காவல் நிலையம், பள்ளி, கல்லுாரி மற்றும் சுங்கச்சாவடி உள்ளிட்ட அலுவலகம் இருந்தும், கடை திறப்பதற்கு முன் வியாபாரம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் செயல்படும் மதுக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.