உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏ.டி.எம்., கார்டு கிடைக்காமல் 25,000 விவசாயிகள் பரிதவிப்பு காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி அலைக்கழிப்பு

ஏ.டி.எம்., கார்டு கிடைக்காமல் 25,000 விவசாயிகள் பரிதவிப்பு காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி அலைக்கழிப்பு

பொன்னேரி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலாவதியான ஏ.டி.எம்., கார்டுக்கு பதிலாக புதிய கார்டு வழங்காததால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு கடன் பெறும், 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், பணம் எடுக்க, 20 - 30 கி.மீ., பயணிக்கும் நிலை உள்ளதால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல் படுகிறது. விண்ணப்பம் இதன் கீழ், பொன்னேரி வட்டத்தில் உள்ள கோளூர், மெதுார், தேவம்பட்டு, வெள்ளக்குளம், கிருஷ்ணாபுரம், ஆரணி உள்ளிட்ட ஒன்பது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 10 - 15 கிராமங்கள் உள்ளன. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 25,000க்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாகவும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் விவசாயிகள் பயிர் கடன் பெற கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பிப்பர். அதற்கான பணத்தை, பொன்னேரியில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைக்கு சென்று பெற வேண்டும். காலாவதி அதேசமயம், வங்கி வழங்கிய ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுத்து கொள்வர். ஒரு சிலர், வங்கிக்கு நேரடியாக வந்து பணம் பெற்று செல்வர். கடந்த 2020 ஏப்ரல் மாதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகள், நடப்பாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. காலாவதியான கார்டுகளுக்கு மாற்றாக, புதிய கார்டு வழங்கப்படவில்லை. ஆறு மாதங்களாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், 'ஏ.டி.எம்., கார்டுகள் ஸ்டாக் இல்லை' எனக்கூறி, விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில், பல்வேறு வகைகளில் கடன் பெறும் விவசாயிகள், பொன்னேரி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு நேரடியாக வந்து பணம் பெற்று செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், கடைகோடி கிராமங்களில் வசிப்பவர்கள், 25 - 35 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. வங்கியில் சேவை குறைபாடு ஆறு மாதங்களாக ஏ.டி.எம்., கார்டு வழங்காமல் உள்ளனர். ஏ.டி.எம்., கார்டு இல்லாததால், ஒரே நேரத்தில் பயிர்க்கடன் பெற விவசாயிகள் வங்கிக்கு வருகின்றனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. போதிய இடவசதியும், பணியாளர்களும் இல்லை. வங்கியில் சேவை குறைபாடுகள் அதிகமாக இருக்கின்றன. வங்கி நிர்வாகத்திடம் இருந்து சரியான பதிலும் இல்லை. இதனால், அரசுக்கு தான் அவப்பெயர் ஏற்படுகிறது. - எல்.பாஸ்கர், விவசாயி, அ.ரெட்டிப்பாளையம், பொன்னேரி.ஒரு நாளைக்கு ரூ.50,000 தான் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவில் தொகை வழங்கப்படுகிறது. அதாவது, இரண்டு லட்சம் ரூபாய் பயிர்கடனுக்கு பணத்தை எடுக்க வேண்டிய சூழலில், ஒரு நாளைக்கு, 50,000 ரூபாய் என, நான்கு நாட்கள் வங்கிக்கு வந்து எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். கடந்த 17ம் தேதி, தமிழக முதல்வர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, ஒரே நாளில் பயிர் கடன் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் இங்கு, பணத்தை பெறுவதற்கு பல நாட்கள் அலையும் நிலை உள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - கு.பிரதாப் விவசாயி, கள்ளூர், பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி