தொடர் மின்வெட்டு எதிரொலி 30 கிராமவாசிகள் அவஸ்தை
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம், நெடும்பரம், கனகம்மாசத்திரம், கூளூர், காஞ்சிப்பாடி, ராமஞ்சேரி, குண்ணவலம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், நேற்று முன்தினம் மதியம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.மேலும், குறைந்த மின்னழுத்தம் வினியோகிக்கப்படுவதால் வீடுகளில் லைட், மின்விசிறி போன்ற அத்தியாவசிய சாதனங்கள் இயங்கவில்லை. தொடர்ந்து, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. கடும் வெயில் தாக்கம் காரணமாக புழுக்கம் தாங்க முடியாமல், குழந்தைகள், பெரியவர்கள் துாங்க முடியாமல் சிரமப்படுவதாக கிராமவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து திருவள்ளூர் மின்வாரிய அதிகாரி கூறியதாவது:நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர் மின்வெட்டால் கிராமவாசிகள் பாதிக்காமல் இருக்க, மின் சப்ளை மாற்றி வழங்கி வருகிறோம். சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் சீரான மின் வினியோகம் வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.