நிரம்பி வழியும் வல்லுார் அணைக்கட்டு கடலுக்கு செல்லும் 6,000 கனஅடி நீர்
மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், வல்லுார் அணைக்கட்டு நிரம்பி, விநாடிக்கு, 6,000 கனஅடி நீர் வெளியேறி, எண்ணுார் கடலுக்கு செல்கிறது. மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்து உள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக, கடந்த சில தினங்களாக கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து இருந்ததால், அணைக்கட்டில் படிப்படியாக நீர் இருப்பு அதிகரித்தது. இந்நிலையில், கடந்த, 15 ல், பூண்டி நீர்தேக்கத்தில், விநாடிக்கு, 700 கனஅடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றிற்கு வெளியேற்றப்பட்டது. தொடர் மழையால் அடுத்த வந்த நாட்களில் தண்ணீர் வெறியேற்றுவது அதிகரிக்கப்பட்டது. நேற்றை நிலவரப்படி, விநாடிக்கு, 4,900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால், அகரம், குதிரைப்பள்ளம், வன்னிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின. வல்லுார் அணைக்கட்டும் நிரம்பி, மூன்று அடி உயரத்திற்கு ஆற்றுநீர் ஆர்ப்பரித்து வெளியேறுகிறது. அணைக்கட்டில் இருந்து, விநாடிக்கு, 6,000 கனஅடி நீர் வெளியேறி, எண்ணுார் கடலுக்கு செல்கிறது. வழக்கமாக, நவம்பர் மாதம் இறுதி அல்லது, டிசம்பர் மாத துவக்கத்தில் அணைக்கட்டிற்கு நீர்வரத்து இருக்கும். தற்போது பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் தினமும் பெய்து வரும் மழையால், முன்கூட்டியே வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் உபரிநீர் வெளியேறுவது மேலும் அதிகரிக்கும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.