உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆண்டுதோறும் 7 டி.எம்.சி., மழைநீர் கடலில் கலப்பு...வீணடிப்பு: புது நீர்த்தேக்க திட்டம் கிடப்பில் போனதால் அதிருப்தி

ஆண்டுதோறும் 7 டி.எம்.சி., மழைநீர் கடலில் கலப்பு...வீணடிப்பு: புது நீர்த்தேக்க திட்டம் கிடப்பில் போனதால் அதிருப்தி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழு கண் பாலம் அருகே, ஆண்டுதோறும் 7 டி.எம்.சி., மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. தண்ணீரை சேமிக்கும் வகையில், அப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என தெரிவித்த நிலையில், தற்போது வரை செயல்படுத்தாமல் அலட்சியம் செய்து வருவதாக விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் அதிருப்தியில் உள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, அரை டி.எம்.சி., தண்ணீரை சேமிக்கும் வகையில், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் உபரிநீர் பொம்மாஜிகுளம், செதில்பாக்கம், மாதர்பாக்கம், மாநெல்லுார் வழியாக ஒரு கால்வாயும், பூவலம்பேடு, ஈகுவார்பாளையம், பெரியஓபுளாபுரம், சாணாபுதுார், ஏடூர் வழியாக மறு கால்வாயும், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஏழு கண் பாலம் அருகே இணைகிறது.அங்கிருந்து, பழவேற்காடு ஏரி வழியாக உபரிநீர் கடலில் கலக்கிறது. இடைப்பட்ட கால்வாய் பகுதிகளில், ஒரு தடுப்பணை கூட இல்லாததால், ஆண்டுதோறும் 5 முதல் 7 டி.எம்.சி., மழைநீர், நேரடியாக கடலில் கலந்து வீணாகிறது.கடலில் கலக்கும் தண்ணீரின் அளவை குறைக்கும் நோக்கில், எளாவூர் ஏழு கண் பாலம் அருகே, 190 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக அணைக்கட்டுடன் கூடிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில், 200 மீட்டர் நீளத்திற்கு அணைக்கட்டு அமைத்து, அரை முதல் ஒரு டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க திட்ட வரைவு தயாரித்து, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் ஒப்புதலுக்கு, நீர்வளத் துறையினர் அனுப்பினர்.அதில், 19 துாண்கள் கொண்ட அணைக்கட்டும், அதன் கீழ் நீர்த்தேக்கத்தில் உப்புநீர் கலக்காமல் இருக்க, ஏழு மீட்டர் ஆழத்திற்கு சுவர் அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.விரைவில் ஒப்புதல் பெற்று, 2023ம் ஆண்டு கோடைக்காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதே ஆண்டு மழைக்காலத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிணற்றில் போட்ட கல் போன்று, நீர்த்தேக்க திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க வழி இருந்தும், அதை அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியாக இருப்பது வருத்தம் அளிப்பதாக விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.மேலும் தாமதிக்காமல், எளாவூர் பகுதியில் நீர்த்தேக்க திட்டமும், இடைப்பட்ட கால்வாய் பகுதியில், குறைந்தது நான்கு தடுப்பணைகளையாவது நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கடலில் கலக்கும் தண்ணீரின் அளவை குறைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்க திட்ட வரைவு தயாரித்து அனுப்பினோம். ஆனால், கட்டுமான பிரிவில் மேற்கொண்ட கள ஆய்வில், அந்த இடத்தில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. இருப்பினும், அப்பகுதியில் தடுப்பணை அமைக்க, திட்டம் வகுத்து வருகிறோம். விரைவில், அதற்கான பணிகள் துவங்கப்படும்.நீர்வளத் துறை அலுவலர்,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ