திருத்தணி தாலுகாவில் 9 மகளிர் ரேஷன் கடைகள் மூடல்
திருத்தணி:திருத்தணி தாலுகாவில் உள்ள 74 கிராமங்களில், 137 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் வாயிலாக, 65,856 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, ஒன்பது ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. மீதமுள்ள கடைகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகின்றன.இந்த ரேஷன் கடைகளுக்கு, மேல்திருத்தணியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடக்கில் இருந்து ரேஷன் பொருட்கள் லாரி, வேன்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக நடத்தப்படும் ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு சீரான முறையில் பொருட்கள் வழங்குவதில்லை.மேலும், ஒரு மாதம் கூட ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்காமல், ரேஷன் கார்டுதாரர்களை அலைக்கழித்தனர். இதுகுறித்து ரேஷன் கார்டுதாரர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.மாவட்ட கலெக்டர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர், மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடைகளில் திடீரென ஆய்வு செய்தபோது, மேற்கண்ட தவறுகள் நடந்து வருவது உண்மை என தெரிந்தது.இதையடுத்து கலெக்டர் பிரதாப், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக நடத்தப்படும் ஒன்பது கடைகளும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.மேலும், அந்த கடைகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், அருகில் உள்ள கூட்டுறவு துறையின் வாயிலாக இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, மகளிர் ரேஷன் கடைகள் மூடப்பட்டது.