வணிக வளாகத்தை தவிர்த்து சாலையில் செயல்படும் சந்தை
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, புதுப்பட்டு, ஈச்சம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பகுதி வாசிகளின் அன்றாட தேவைகள் மற்றும் காய்கறி விற்பனை உள்ளிட்டவற்றுக்காக, பேரூராட்சி அலுவலக வளாகத்தை ஒட்டி வார சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தை வளாகம் கட்டப்பட்டு அதில் கடைகள் செயல்பட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இந்த வார சந்தை கூடுகிறது. வியாபாரிகள் சந்தை வளாகத்தில் கடைகளை நடத்தாமல், பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகளை திறக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். சந்தை வளாகத்தை ஒட்டியே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக அமைந்து விட்டால், பள்ளி வளாகத்திற்கு முன்பாக விரிக்கப்படும் கடைகளால் பள்ளி மாணவர்களும் அவதிப்படுகின்றனர். சந்தையில் கூடும் கடைகளை சந்தை வளாகத்தில் நடத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.