உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சி சார்பில் புதிய காய்கறி மார்க்கெட் ரூ.1.87 கோடியில் நுாறு கடைகள் தயார்

நகராட்சி சார்பில் புதிய காய்கறி மார்க்கெட் ரூ.1.87 கோடியில் நுாறு கடைகள் தயார்

திருவள்ளூர்,திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரின் பிரதான பகுதியான பஜார் வீதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. அங்கு, 50க்கும் மேற்பட்டோர் காய்கறி கடைகள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.பஜார் வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால், காய்கறி வாங்க வருவோர் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். குறுகிய இடத்தில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் இடவசதியின்றி காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.மேலும், வாங்கிய பொருட்களையும் வெளியில் கொண்டுவர, போக்குவரத்து நெரிசலை கடக்க சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், பஜார் வீதியில் தொடரும் நெரிசலை தவிர்க்கவும், விசாலமான இடத்தில் காய்கறி கடைகள் விற்பனை செய்யவும் நகராட்சி சார்பில், ஈக்காடு செல்லும் சாலையில், தலக்காஞ்சேரி அருகே புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.இதற்காக, நகராட்சி நிதியில் இருந்து, 1.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 100 கடைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், புதிய மார்க்கெட் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.தற்போது, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி, இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், காய்கறி சந்தை இயங்கும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !