உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜெ.ஜெ.கார்டனில் அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

ஜெ.ஜெ.கார்டனில் அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

திருவள்ளூர்:ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதியில், அரைகுறையாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயால், சிறுவானுார்கண்டிகை பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார்கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகே அமைந்துள்ள இந்நகரில், 500க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடிபெயர்ந்துள்ளனர். மேலும், பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நகரில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை. இரண்டு இடங்களில் தொட்டி அமைத்தும், தற்போது வரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் ஓராண்டுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாமல், அரைகுறையாக கால்வாய் கட்டப்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், மழைநீர் கால்வாயை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டருக்கு குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ