ஏரி வரத்து கால்வாயில் ஆபத்தான பயணம்
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டி மோட்டூர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மாணவர்கள், பள்ளி, கல்லுாரிக்கு என திருத்தணி நகருக்கு செல்கின்றனர்.அதே போல பொதுமக்களும் தங்களது அத்தியாவசிய பணிகள் காரணமாக திருத்தணி நகருக்கு சென்று வருகின்றனர். இவர்கள், முருக்கம்பட்டு --- வேலஞ்சேரி செல்லும் ஏரி வரவு கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த வாரம் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் முருக்கம்பட்டு ஏரி நிரம்பி, அதிலிருந்து உபரி நீர் வரவுகால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் செல்லும் வரத்துகால்வாயில் கடந்து செல்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும்,மேற்கண்ட கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான முறையில் கால்வாயில் இறங்கி செல்கின்றனர்.எனவே, திருத்தணி ஒன்றிய நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தரைப் பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.