உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விதிமீறி சென்ற டிப்பர் லாரி சிறுகுமியில் கவிழ்ந்து விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

விதிமீறி சென்ற டிப்பர் லாரி சிறுகுமியில் கவிழ்ந்து விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

திருத்தணி:திருத்தணி அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆந்திர மாநிலத்தில் இருந்து கிராவல் மண் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகள், தமிழக எல்லையான பள்ளிப்பட்டு, நொச்சிலி, சிறுகுமி, திருத்தணி வழியாக சென்னைக்கு சென்று வருகின்றன.இந்த லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால், அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.நேற்று காலை 6:00 மணியளவில், பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கிராவல் மண் ஏற்றிக் கொண்டு நொச்சிலி வழியாக கே.ஜி.கண்டிகை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.இதில் ஒரு டிப்பர் லாரி, சிறுகுமி பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட நெடுஞ்சாலையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இதனால், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையோரம் நீண்ட துாரம் நின்றன. இதை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஒரு மணி நேரம் போராடி டிப்பர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:காலை - மாலை நேரங்களில், 3 மணி நேரம் டிப்பர் லாரிகள், கே.ஜி.கண்டிகை நொச்சிலி, அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக செல்லக்கூடாது என, கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.ஆனால், டிப்பர் லாரிகள் கலெக்டர் உத்தரவை மீறி இரவு, பகல் மற்றும் பள்ளி நேரங்களிலும் அசுர வேகத்தில் சென்று வருகின்றன.பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் டிப்பர் லாரிகள், பள்ளிப்பட்டு - ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு - நகரி, பள்ளிப்பட்டு - பொதட்டூர்பேட்டை ஆகிய மூன்று மாநில நெடுஞ்சாலைகள் வழியாக, திருத்தணி நகர எல்லைக்கு வந்து, அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம். ஆனால், மாவட்ட நெடுஞ்சாலை ஒரு வழிச்சாலையில் லாரிகள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, விதிமீறும் டிப்பர் லாரிகள் மீது கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை