காட்சிப்பொருளாக மாறிய நீர்த்தேக்க குடிநீர் தொட்டி
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம் சென்னங்காரணி ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த குடிநீர் தொட்டி வாயிலாக விநியோகிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 14.42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளான நிலையில், தற்போது வரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.