கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை: கடன் தொல்லையால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊத்துக்கோட்டை அடுத்த மேலக்கரமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பரத், 32; பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி கிரிஜா. பரத், தன் நண்பர்களுக்கு 13 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், நண்பர்கள் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் கிரிஜாவிடம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, கிரிஜா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த பரத், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பென்னலுார்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.