உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மஹா சிவராத்திரியை ஒட்டி திருவாலங்காடில் ஆலோசனை

மஹா சிவராத்திரியை ஒட்டி திருவாலங்காடில் ஆலோசனை

திருவாலங்காடு திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில், நடராஜ பெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில் முதல்சபையான ரத்தின சபையாகும்.இக்கோவிலில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்வர்.அதன்படி, இந்தாண்டு வரும் 26ம் தேதி, இரவு 9:00 மணி முதல், 27ம் தேதி அதிகாலை வரை சிவராத்திரியை ஒட்டி பூஜை நடைபெறும்.அப்போது பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏற்பாடு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஆருத்ரா மண்டபத்தில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரம், சுகாதார மற்றும் காவல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, பேருந்து வசதி, தற்காலிக கழிப்பறை வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வருவாய் கோட்டாட்சியர் தீபா அறிவுறுத்தினார்.இதில், திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், தாசில்தார் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி