டூ - வீலர்கள் தீ வைத்து எரிப்பு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது
ஆர்.கே.பேட்டை:அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பீரகுப்பம் அரசு மருத்துவமனையில், ' 108' ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரியும் கலையரசன், 37, என்பவர், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. விளக்கணாம்பூடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன், இவருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவில் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த கலையரசன், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார். கலையரசனை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.