சுக்குநூறான தார்ச்சாலையால் அத்திப்பட்டுவாசிகள் அவதி
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து ராமலிங்காபுரம் செல்லும் தார்ச்சாலை ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இரண்டு ஆண்டுகளாக சாலை சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பரவி கிடக்கின்றன.இச்சாலை வழியாக அத்திப்பட்டு, காவேரிராஜபுரம், ரங்காபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் திருவள்ளூருக்கு வாகனங்கள் வாயிலாக சென்று வருகின்றனர்.அதேபோல ராமலிங்காபுரம், குன்னவளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள், அரக்கோணம் செல்லவும், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, இச்சாலை சேதமடைந்துள்ளதால், வாகனங்களை இயக்க முடியாமல் கிராமவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.இதுதொடர்பாக, ஓராண்டுக்கு முன்பே நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே, சாலையை சீரமைக்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.