உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஏரிகளில் விதி மீறி வண்டல் மண் எடுப்பு அட்டூழியம்!  அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி

 ஏரிகளில் விதி மீறி வண்டல் மண் எடுப்பு அட்டூழியம்!  அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி

திருத்தணி: திருத்தணி தாலுகாவில் நீர்வளத்துறையினர் பராமரித்து வரும் ஏரிகளில், விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுப்பு என்ற போர்வையில், சிலர் ஏரியில் அதிகளவு ஆழத்திற்கு மண் எடுத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி தாலுகாவில் 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் 60 ஏரிகளை திருத்தணி நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.விவசாயிகள் தங்களது நிலத்தை மேம்படுத்த, ஏரிகளில் இருந்து வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தாசில்தாரிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, கனிம விதிக்குட்பட்டு அனுமதி பெற்று, ஏரிகளில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல்வேறு கட்டுப்பாடு

கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய அடங்கல் சான்று பெற்று, வேளாண் அலுவலரிடம் வண்டல் மண் எடுக்க சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.இலவசமாக விவசாய பணிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் அனுமதி, 30 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.ஒரு விவசாயி குறைந்த பட்சம், 25 யூனிட் முதல் அதிகபட்சமாக, 198 யூனிட் மண் எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீர் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் தான் வண்டல் மண் எடுக்க வேண்டும்.ஏரிகளில் மண் எடுப்பதற்கு நீர்வளத்துறை வரைபடத்தில் அளவீடுகள் குறியீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே, வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். ஒரே இடத்தில் வெட்டி எடுக்காமல், ஏரி முழுதும், மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். ஏரியில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மண்ணை விற்பனை செய்யக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.திருத்தணி தாலுகாவில், 250 விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். சிலர் ஒரு யூனிட் மண், 3,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.ஏரியில் எடுக்கப்படும் மண் நிலத்திற்கு பயன்படுத்தாமல், வீடுகள் கட்டுவதற்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களின் நிலத்தை சமன்படுத்தவும், செங்கல் சூளைகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.

நீர்மட்டம் பாதிப்பு

பெரும்பாலான ஏரிகளில், ஒரே இடத்தில், ஐந்தரை அடி ஆழத்திற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண் எடுத்து விற்பனை செய்கின்றனர். ஏரிகளில் அதிகளவு ஆழத்திற்கு மேல் மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது.இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறையும், விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுவதால் விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.விதிமுறைகளை மீறி மண் எடுப்பதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். விவசாயிகள் பெயரில் சிலர் வண்டல் மண்ணுக்கு விண்ணப்பித்து, மண்ணை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் டிராக்டர்களில் ஏரி மண் எடுக்கும் போது தனிக்குழு அமைத்து திருத்தணி தாலுகாவில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாயிகளுடைய நிலங்களை நேரில் ஆய்வு செய்து, வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ