திருத்தணி கோவிலில் படித்திருவிழா ஆட்டோக்களுக்கு 2 நாட்கள் தடை
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும், டிச.31 படித்திருவிழாவும், ஜன.1 ஆங்கில புத்தாண்டு தரிசனம் வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர்.இந்நிலையில், முருகன் கோவிலில் நடைபெறும் படித்திருவிழா, புத்தாண்டு தரிசனம் விழாவிற்கு வருகை தரும், பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தான ஆலோசனை கூட்டம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தீபா தலைமையி நேற்று நடந்தது. இதில் கோவில் நிர்வாகம், நகராட்சி, சுகாதாரம், மின்வாரியம், போக்குவரத்து மற்றும் காவல் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.தொடர்ந்து ஆர்.டி.ஓ., தீபா பேசியதாவது: படித்திருவிழா, புத்தாண்டு தரிசனம் நடைபெறும் இரு நாட்களுக்கு மலைப்பாதையில் செல்வதற்கு அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டோக்கள் இரு நாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக மலையடி வாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு, 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை சார்பில், 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து, சுகாதார பணிகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மலைக்கோவில், மலைப்படிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், கோவில் உதவி ஆணையர் அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.