அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க அமைத்த தடுப்பு ஒரே வாரத்தில் சேதம்
திருத்தணி, திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து, திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலைக்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் அதிகளவில் விபத்துகள் நடந்து வருகின்றன.இதை தடுக்கும் வகையில், கடந்த மாதம் 19ம் தேதி கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி, மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகரன், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் ஆகியோர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் ஆய்வு செய்தனர்.அதன்பின், விபத்துகளை தடுக்க, 'பிளாஸ்டிக் ஸ்டிக்' தடுப்புகள், 750 மீட்டர் துாரம் நடுவதற்கு தீர்மானித்தனர். அதன்படி, கடந்த 16ம் தேதி திருத்தணி நெடுஞ்சாலை துறை சார்பில், ரயில்வே சுரங்கப்பாதையில், 'பிளாஸ்டிக் ஸ்டிக்' தடுப்புகள் பொருத்தப்பட்டது.ஆனால், அதிகாரிகள் முறையாக பொருத்ததால், ஏழு நாட்களில் ஏராளமான பிளாஸ்டிக் ஸ்டிக் சேதம் அடைந்துள்ளது. மேலும், 25க்கும் மேற்பட்ட 'பிளாஸ்டிக் ஸ்டிக்' காணாமல் போனது. இதனால், சுரங்கப்பாதையில் நடந்து வரும் விபத்துகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, கலெக்டர் பிரதாப் ரயில்வே சுரங்கப்பாதையில் ஆய்வு செய்து, தரமான பிளாஸ்டிக் ஸ்டிக்கை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.