வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம் நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால், தை பிரம்மோற்வம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த ஆண்டிற்கான, தை பிரம்மோற்சவம், நேற்று, காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தங்க சப்பரத்தில் வீதியுலா வந்தார். இரவு சிம்ம வாகனம் நடந்தது.நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, கருடசேவை, நாளை நடக்கிறது. வரும், 29ல் தை அமாவாசை முன்னிட்டு, ரத்னாங்கி சேவை நடக்கிறது.மறுநாள், 30ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. வரும், பிப்.2 வரை தொடர்ந்து, உற்சவர் வீரராகவர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.