லோடு லாரிகளை நிறுத்துவதால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறி
மீஞ்சூர்:துறைமுகங்களுக்கு 'லோடு' ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரிகள், அத்திப்பட்டு பாலத்தின் மீது நிறுத்தப்படுவதால், அதன் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், எண்ணுார் காமராஜர் மற்றும் அதானி துறைமுகங்களுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன. இவை, துறைமுகங்களுக்குள் செல்வதற்கு அனுமதி கிடைக்கும் வரை, வல்லுார் - எண்ணுார் துறைமுக சாலையோரம் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது. மேலும், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள ரயில்வே பாலத்தின் மீதும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்டநேரம் காத்திருக்கின்றன. இப்பாலம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாத நிலையில், பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து உள்ளன. இந்நிலையில், கன்டெய்னர் லாரிகளும் பாலத்தில் நிறுத்தப்படுவதால், மேலும் பலவீனம் அடைந்து, உறுதிதன்மையை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே வல்லுார் - எண்ணுார் துறைமுகம் சாலையோரமும், பாலத்தின் மீதும் வாகனங்கள் நிறுத்துவற்கு தடை விதித்து, 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.