இலவச கழிப்பறைக்கு கட்டணம் பேருந்து பயணியர் அதிருப்தி
திருமழிசை:பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் உள்ள இலவச பொது கழிப்பறைக்கு கட்டணம் வசூலிப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். பூந்தமல்லி அரசு பேருந்து பணிமனை அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, திருப்பதி மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தில், பூந்தமல்லி நகராட்சி சார்பில் பயணியர் வசதிக்காக இலவச பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கழிப்பறைக்கு கட்டணம் வசூலிப்பதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர். 'பொது கழிப்பறை' என எழுதப்பட்டுள்ளதில், பொது என்பதை மட்டும் மறைத்து வைத்து, கட்டண கழிப்பறையாக மாற்றியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.