உயரமான வேகத்தடை விபத்தில் சிக்கிய கார்
ஊத்துக்கோட்டை: அதிகளவு உயரம் கொண்ட வேகத்தடையை கடந்த கார் விபத்தில் சிக்கியதால், ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே, 36 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், ஜனப்பன்சத்திரம் மற்றும் இணைப்பு சாலை வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திராவின் பிச்சாட்டூர், புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன. சமீபத்தில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 36 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்பட்டது. நேற்று, ஊத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காவல் நிலையம், ரெட்டித் தெரு உள்ளிட்ட இடங்களின் அருகே, வழக்கத்தை விட அதிக உயரத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவில் உள்ள வேகத்தைடையை, அசுர வேகத்தில் கடந்த கார் நிலை தடுமாறி, அங்கிருந்த மரத்தின் மீது மோதியது. அக்கம் பக்கத்தினர் ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், காரில் இருந்த ஓட்டுநர் தாசுகுப்பம் சல்மானை, 23, மீட்டு, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேகத்தடைகள் உயரமாக அமைத்ததே விபத்திற்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.