நகராட்சி பகுதியில் தொல்லை குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதிவாசிகளுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகள் பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.திருவள்ளூர் நகராட்சி பூண்டி காப்பு காடு அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து குரங்குகள் கலெக்டர் இரை, குடிநீர் தேடி, கலெக்டர் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உலா வருகிறது. குரங்குகள் திறந்த நிலையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.மேலும், குழந்தைகளை விரட்டி, கடிக்கிறது என, நகரவாசிகள் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து, கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் மோகன் மற்றும் சுகாதார ஊழியர்கள், வனத்துறையினர் உதவியுடன் நேற்று சி.வி.நாயுடு சாலை பகுதியில் சுற்றித்திரிந்த 7 குரங்களை கூண்டு வைத்து பிடித்தனர்.பிடிபட்ட குரங்குகள் அனைத்தும், பூண்டி காப்புக்காட்டில் வனத்துறையினர் பாதுகாப்பாக விடுவித்தனர். இப்பணி மேலும் தொடரும் என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.