அறுந்து விழுந்த மின்கம்பி தாமதமாக வந்த ஊழியர்கள் காவேரிராஜபுரம் மக்கள் வாக்குவாதம்
திருவாலங்காடு,:காவேரிராஜபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க, தாமதமாக வந்த மின்வாரிய ஊழியரிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் காலனியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இரவு, 9:30 மணியளவில் சர்ச் எதிரே உள்ள கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது, மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்தும், ஒரு மணி நேரத்திற்கு பின்னரே வந்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த பகுதி மக்கள், மின்வாரிய ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவேரிராஜபுரம் மக்கள் கூறுகையில், 'மழைக்காலத்தில் மின்வாரிய அதிகாரிகளிடம் மின்சாரம் துண்டிப்பு, மின்கம்பி அறுந்து விழுந்தது தொடர்பாக புகார் தெரிவிக்க, அதிகாரிகளின் மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், அவர்கள் அழைப்பை ஏற்பதில்லை' என்றனர். உடனடியாக நடவடிக்கை மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு மக்கள் மொபைல்போனில் அழைத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். நேற்று முன்தினம் இரவு கனமழை மற்றும் இடி, மின்னல் காரணமாக, காவேரிராஜபுரம் கிராமத்திற்கு செல்ல தாமதமானது. புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்வாரிய அதிகாரி, கனகம்மாசத்திரம்.