10ம் வகுப்பு தேர்வு: கடந்தாண்டை விட 3.08 சதவீதம் அதிகம்:26 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், தேர்வு எழுதிய 31,305 மாணவர்களில், 28,049 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 26 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.தமிழகத்தில் 2024 - 25ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 28ல் துவங்கி, ஏப்., 15 வரை நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், 147 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இம்மையங்களில், திருவள்ளூர் மாவட்டத்தில், 440 பள்ளிகளில் இருந்து, 15,588 மாணவர்கள், 15,717 மாணவியர் என, மொத்தம் 31,305 பேர் தேர்வு எழுதினர்.நேற்று தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில், 13,550 மாணவர்கள், 14,499 மாணவியர் என, மொத்தம் 28,049 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், 89.60 சதவீதம். இது, கடந்தாண்டு பெற்ற, 86.52 சதவீதத்தை விட, 3.08 சதவீதம் அதிகம்.வழக்கம்போல, இந்த ஆண்டும் மாணவர்களைவிட, மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 86.93 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி விகிதம் 92.25 ஆக உள்ளது.அரசு பள்ளிகளை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 225 அரசு பள்ளிகளில், 7,838 மாணவர்கள், 8,265 மாணவியர் என, 16,103 பேர் தேர்வு எழுதினர். இதில், 6,345 மாணவர்கள், 7,313 மாணவியர் என, மொத்தம் 13,658 பேர் தேர்ச்சி வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 80.95. இது கடந்தாண்டு பெற்ற, 80.06 சதவீதத்தை விட, 0.89 சதவீதம் கூடுதல்.மாவட்டத்தில், மொத்தம் 97 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில், 26 அரசு பள்ளிகளும் அடக்கம். கடந்தாண்டு 20 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.கணிதம் பாடத்தில் - 3, அறிவியல் - 40, சமூக அறிவியல் - 48 என, மொத்தம் 91 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாநில அளவில், 36வது இடத்தை பிடித்துள்ளது.பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி, கோலப்பஞ்சேரி, செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, பெரியகளக்காட்டூர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட 26 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.பள்ளி வாரியாக 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்பள்ளி தேர்வு எழுதியவர் தேர்ச்சி பெற்றோர் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டுஅரசு 15,078 12,755- 84.-58- 82.09 +2.49நகராட்சி 534 455 85.21 89.84- - ------4.63 ஆதிதிராவிடர் 481 440 91.48 68.40 +23.08நிதி உதவி 1,960 1,127 83.93 83.45 +0.48பகுதி நிதி உதவி 1,493 1,360 91.09 88.28 +2.81சுயநிதி மெட்ரிக் 10,777 10,468 97.13 96.91 +0.22சுயநிதி டிபென்ஸ் 10 10 100 92.44 +7.56மொத்தம் 31,305 28,049 89.60 86.52 +3.08
பிளஸ் 1 தேர்வில் 87.39 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவில், திருவள்ளூர் மாவட்டம் 87.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட, 1.85 சதவீதம் அதிகம்.திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், 248 பள்ளிகளைச் சேர்ந்த 13,903 மாணவர்கள், 15,331 மாணவியர் என, மொத்தம் 29,234 பேர் 109 மையங்களில் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 11,479 மாணவர்கள், 14,068 மாணவியர் என, மொத்தம் 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.39. மாவட்டத்தில், 102 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 14,137 பேரில், 11,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 79.13. இது கடந்தாண்டு 75.50 சதவீதத்தை விட, 3.63 சதவீதம் கூடுதல். மாவட்ட அளவில், இரண்டு அரசு பள்ளிகள் உட்பட 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
3 பொது தேர்வுகளிலும் திருவள்ளூர் 36வது இடம்
திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 8ம் தேதி வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வில், 91.49 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 36வது இடத்தை பிடித்தது. நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வில், 87.39 சதவீதம் தேர்ச்சி பெற்று, அதே 36வது இடத்தைப் பிடித்தது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், 89.60 சதவீதம் தேர்ச்சி பெற்று, 36வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.