பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் மீன்வளம்... பாதிப்பு: வரத்து குறைவால் வருவாயின்றி மீனவர்கள் தவிப்பு
பழவேற்காடு:பருவநிலை மாற்றம் காரணமாக பழவேற்காடு கடலில், வழக்கத்திற்கு மாறாக நீரோட்ட திசை மாறி இருப்பதால், மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வருவாயின் றி தவித்து வருவதுடன், அன்றாட குடும்ப செலவினங்களுக்கு கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில் கடல் மற்றும் ஏரியில், 35 மீனவ கிராமங்களை சேர்ந்த, 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் பைபர், கட்டுமரம், நாட்டுப்படகு என, 2,000க்கும் மேற்பட்ட படகுகளை பயன்படுத்துகின்றனர். மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு தினமும், கடல் மற்றும் ஏரியில் மீன்பிடித்து, அதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும். மீனவர்கள் வலையில் சீசனுக்கு ஏற்ப மத்தி, கவலை, அயிலா, வஞ்சிரம், பாறை, சூறை, கிழங்கான், வவ்வால் என, பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். ஒரு வாரமாக மீனவர்கள் வலையில், பெரிய அளவில் மீன்கள் கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிகாலையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள், வலைவிரித்து நீண்டநேரம் காத்திருந்து, குறைந்த அளவிலான மீன்களே வலையில் சிக்குவதால், அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான மீனவர்களின் வலையில் மீன்கள் ஏதும் சிக்காமல், காலி படகுகளுடன் கரை திரும்புகின்றனர். ஒரு சிலர் இரண்டு நாள் கடலில் தங்கி மீன்பிடித்து வந்தாலும், குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்புகின்றனர். அவையும், கவளை, மத்தி, அயிலா, நிவரை உள்ளிட்ட குறைந்த விலை போகும் மீன்களாக உள்ளன. இதனால் கிடைக்கும் வருவாய், டீசலுக்கு கூட கட்டுப்படியாக நிலை உள்ளது. கடலில் மீன்வளம் வெகுவாக குறைந்து, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத நிலையில், ஒரு வாரமாக தொழிலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ளனர். தொழில் மற்றும் வருவாய் இல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர். மீன்பிடி படகுகள், வலைகள் கடற்கரை மற்றும் ஏரிக்கரைகளில் பணியின்றி ஓய்வெடுக்கின்றன. மீனவர்களிடம் மீன்களை வாங்கி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளும், வருவாயின்றி தவித்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடலில், வழக்கத்திற்கு மாறாக நீரோட்ட திசை மாறி இருப்பதால், மீன்வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்வரத்து குறைவு காலம் அக்டோபர், நவம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம். இது, மீன்வரத்து குறைவு காலமாகவே கருதப்படுகிறது. பருவமழை தீவிரமடையும் போது, பழவேற்காடு ஏரிக்கு ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகள் மூலம் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது, இறால்கள் அதிகளவில் ஏரியில் கிடைக்கும். பருவமழை முடிந்த பின், கடல் மற்றும் ஏரியில் மீன்வரத்து அதிகரிக்கும். இது, இயற்கையாக நடைபெறும் நிகழ்வு தான். - மீன்வளத் துறை அதிகாரி, திருவள்ளூர். கடனில் ஓடுது வாழ்க்கை வழக்கத்திற்கு மாறாக கடலில் நீரோட்ட திசை மாறி வருகிறது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கடலின் நீரோட்டம் இருப்பதால், தண்ணீர் தெளிவாக இருக்கிறது. இதனால், நாங்கள் வீசும் வலையில் மீன்கள் சிக்குவதில்லை. ஆழ்கடலில் இருந்து கரையை நோக்கி வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. தற்போது, கடலுக்கு செல்பவர்களுக்கு கிடைக்கும் மீன்கள், டீசலுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை தான் உள்ளது. மாற்று தொழில் இல்லாத நிலையில், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் குடும்ப செலவுக்கு பயன்படுத்துகிறோம். மீண்டும் தொழிலுக்கு செல்லும்போது கடனை அடைக்க வேண்டும். - மீனவர்கள், பழவேற்காடு.