திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாது காப்பு வசதிகள் குறித்து கலெக்டர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். திருத்தணி முருகன் கோவிலில், ஆக.14ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர். இந்நிலையில் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மலைக்கோவிலில் நெரிசலின்றி தரிசனம் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று கோவில் நிர்வாகம், வருவாய் துறை, காவல் துறை, நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் உள்பட அனைத்து துறைகளுடன் கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். திருத்தணி முருகன் மலைக்கோவில், மலைப்பாதை, சரவணபொய்கை திருக்குளம், நீதிமன்ற வளாகம் பின்புறம் வாகனங்கள் நிறுத்துமிடம், புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம். மேலும், மேல்திருத்தணி நல்லாங்குளம் மற்றும் நான்கு இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் கலெக்டர் பிரதாப் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தினார்.