உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விநாயகர் சிலை தயாரிப்போரிடம் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு

விநாயகர் சிலை தயாரிப்போரிடம் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலை தயாரிப்பாளர்களிடம் தணிக்கை செய்ய வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், உதவி காவல் ஆணையர் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சிலை நிறுவுவதற்காக அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பம் மீது உடனடியாக பரிசீலனை செய்து, அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை நிறுவ அனுமதி பெற்ற அமைப்பாளர்களிடம், அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காவல் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், சிலை உற்பத்தி செய்வோரிடம் வரும், 22ம் தேதிக்குள் தணிக்கை செய்ய வேண்டும். காவல் துறையினர், விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் நடத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிலை அமைக்கப்பட்ட இடம், சிலை கொண்டு செல்லும் வழி, அவைகளைக் கரைக்கும் இடங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, அதை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சித் துறை அமைப்பு அலுவலர்களும் சிலைகளைக் கரைக்கும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறு மின்றி பாதுகாப்பான முறையில் சிலை கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில், திடக்கழிவு மேலாண்மையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சிலை கரைக்கும் நீர்நிலைகளில், மூன்று நிலைகளில் அதாவது, கரைத்தலுக்கு முன், கரைக்கும்பொழுது, கரைத்த பின், என நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ