நள்ளிரவு புறநகர் ரயில் சேவை நிறுத்தம் கும்மிடிப்பூண்டி மார்க்க பயணியர் தவிப்பு
பொன்னேரி:சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினமும், 80 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நள்ளிரவு 12:20 மணிக்கு, சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டிக்கு, இரவு நேர கடைசி புறநகர் ரயில் இயக்கப்பட்டு வந்தது.கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் இருந்து எண்ணுார், கத்திவாக்கம், திருவொற்றியூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், ஐ.டி.,நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், பகல்-இரவு ஷிப்டு முடித்து, நள்ளிரவு வீடு திரும்ப மேற்கண்ட புறநகர் ரயிலில் பயணிப்பர்.இந்நிலையில், கடந்த, 2020ல் கொரோனா தொற்று பரவல் காரணமாக புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு, மூன்று மாதங்களுக்கு பின், படிப்படியாக இயக்கப்பட்டன.அதே சமயம், சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு, 12.20 மணிக்கு இயக்கப்பட்டு வந்த கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் சேவை மட்டும் மீண்டும் துவங்காமல் உள்ளது.இதனால் தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பகல்-இரவு நேர பணிமுடிந்து ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் காத்திருந்து, அதிகாலை, சென்னை சென்ட்ரலில், 4:20 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயிலில் வீடு திரும்புகின்றனர்.இரவு முழுதும் துாங்க முடியாமல் ரயில் நிலையங்களில் காத்திருந்து தவிக்கின்றனர். மேலும், அதிகாலை வீடு திரும்பிய சில மணிநேரங்களில் மீண்டும், பகல் - இரவு பணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், ஓய்வு மற்றும் துாக்கம் இன்றி உடல்சோர்வால் தவிக்கின்றனர்.கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மேற்கண்ட புறநகர் ரயிலை மீண்டும் பழையபடி இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.