இடையூறாக கான்கிரீட் தளவாடங்கள் மாறம்பேடில் வாகன ஓட்டிகள் தவிப்பு
சோழவரம்: சோழவரம் அடுத்த ஒரக்காடு - அருமந்தை மாநில நெடுஞ்சாலையில் உள்ள மாறம்பேடு பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கான்கிரீட் கட்டுமானங்கள் வைக்கப்பட்டு உள்ளன.ஒரக்காடில் இருந்து அருமந்தை நோக்கி செல்லும் வாகனங்கள், கான்கிரீட் கட்டுமானங்கள் உள்ள பகுதியை கடக்கும்போது, வலதுபுறமாக பயணிக்க வேண்டி உள்ளது.அதே சமயம் எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன. இரவு நேரங்களில் கான்கிரீட் கட்டுமானங்கள் இருப்பதை அறியாமல், கனரக வாகனங்கள் அதில் மோதி சிறு சிறு விபத்துக்களில் சிக்குகின்றன.மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையின், இணைப்பு சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கான்கிரீட் கட்டுமானங்களால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பெரும் விபத்தும், அதனால் அசம்பாவிதங்களும் நேரிடும் முன், மேற்கண்ட பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கான்கிரீட் கட்டுமானங்களை அகற்றிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.