மேலும் செய்திகள்
அருமந்தையில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
16-Jan-2025
சோழவரம்:சோழவரம் அடுத்த, பூதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 45; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, சோழவரம் அடுத்த, மாறம்பேடு பகுதியில் இருந்து, சோழவரம் - அருமந்தை சாலை வழியாக, 'ஹீரோ ஸ்பிளன்டர்' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.பூதுார் அருகே சென்றபோது, எதிரில் வந்த, கன்டெய்னர் லாரி, பாஸ்கரின் பைக் மீது மோதியது. இதில், பாஸ்கர் நிலை தடுமாறி விழுந்து, லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி விட்டார். செங்குன்றம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நேற்று காலை, விபத்து ஏற்படுத்திய லாரியை, அங்கிருந்து எடுத்து செல்வதற்காக போக்குவரத்து போலீசார் வந்தனர். விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, கிராமத்தினர் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தப்பியோடிய லாரி டிரைவரை ஏன் கைது செய்யவில்லை என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசிகளிடம், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதையடுத்து, சிறைபிடித்து வைத்திருந்த லாரியை விடுவித்து, கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
16-Jan-2025